Thursday, August 31, 2017
History of dindigul in tamil
திண்டுக்கல் என்றவுடன் ஞாபகம் வருவது கமகமக்கும் பிரியாணியும், பூட்டும் மட்டுமல்ல, மலைக்க வைக்கும் மலைக்கோட்டையும்தான்.
மதுரை முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் 1605 இல் கட்டினார்
இந்த மலைக்கோட்டை பல வரலாற்று போர்களையும், சுதந்திர போராட்ட வடுக்களையும் தாங்கி நிற்கிறது. இருப்பினும் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரியாது. ஏனோ கண்டு கொள்ளவும் அவர்களுக்கு ஆர்வமில்லை. திண்டுக்கல்லில் பல வரலாறுகள் பின்னிப் பிணைந்துள்ளன. இவற்றை கேட்டாலும், நிகழ்வுகள் நடந்த இடத்தை பார்த்தாலும் சுவையாகவும், பெருமையாகவும் இருக்கும். ஆனால், நகர வளர்ச்சியால் பல வரலாற்று சுவடுகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. எனவே இதனை சுற்றுலா தலமாக்கினால், அதிகளவு வருமானம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மலைக்கோட்டை
திண்டுக்கல் மலைக்கோட்டை கடல் மட்டத்தில் இருந்து 360 அடி உயரத்தில், 400 மீட்டர் நீளத்திலும், 300 மீட்டர் அகலத்திலும் அமைந்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மதுரைக்கு நுழையும் வாயில் பகுதியாக அப்போது திண்டுக்கல் இருந்தது.
மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் திண்டுக்கல் மலை மீது கோட்டையை கட்டி பாதுகாப்பு அரண் அமைத்தனர். 1605ல் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் கோட்டையை கட்டினார். பின்பு கடந்த 1623 முதல் 1659 வரை திருமலை நாயக்கர் இந்த கோட்டையை ஆட்சி செய்தார்.
மராட்டியர்கள் படையெடுப்பிற்கு பின்பு நாயக்கர் ஆட்சி இறக்கப்பட்டது. பின்பு மைசூர் உடையார்கள் படையெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் மைசூருவை சேர்ந்த ஹைதர் அலி 1755ல் திண்டுக்கல் படைக்கு 'பவுத்ஜ்தாராக' நியமிக்கப்பட்டார். ஹைதர்அலி 1766ல் கோட்டையை பிடித்து ஆட்சி செய்தார். அவர் காலத்தில்தான் கோட்டைப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது.
திப்புசுல்தான்
கடந்த 1755ல் ஹைதர்அலி தனது மனைவி, மகன் திப்புசுல்தானுடன் திண்டுக்கல்லில் குடியேறினார். 1784 முதல் 1790ம் ஆண்டு வரை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இவரது படைத்தளபதி சையது இப்ராகிம் சாகிப் மூலம் திண்டுக்கல் மலைக்கோட்டை சிறைகூடம், பீரங்கித்தளம் ஆகியவை முழுவை பெற்று, புதுப்பிக்கப்பட்டது. பிரஞ்ச் கட்டடக்கலை அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.
பிரிட்டிஷார் வசமானது
கடந்த 1860ம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் திப்புசுல்தான் தோற்றதையடுத்து கோட்டை பிரிட்டிஷார் வசமானது. பின்பு படை பாதுகாப்பு அரணாகவே விளங்கியது.
சுனைகள்
மலைக்கோட்டை மேலே நீர் சுனைகள் உள்ளன. இது சிறைக்காவலர்கள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.
அகழிகள்:
மலைக்கோட்டையை சுற்றி கோட்டைக் குளம், அய்யன் குளம் என அகழிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அய்யன் குளத்தை குதிரை லாயமாக பயன்படுத்தினர். இதன் மூலம் எதிரிகள் மேலே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டது.
கல்வெட்டு உள்ளது
மலைக்கோட்டையில் தம்பிரான் சுவாமிகள் கல்வெட்டு உள்ளது. இதில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் கோயிலுக்கும், பொதுமக்களுக்கும் அளித்துள்ள நன்கொடை தெரிவிக்கப்பட்டுள்ளது. 1790 மைசூர் யுத்தம் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
தாலுகா சமாதி
தற்போது திண்டுக்கல் மேற்கு தாலுகாவாக இருக்கும் இடம், இறந்த வீரர்களை புதைக்கும் இடமாக இருந்தது. மேலும் கோட்டை மேலாளராக இருந்த பிரிட்டிஷார் சமாதியும், தாலுகா அலுவலகம் அருகேயுள்ளது.
கோபால சமுத்திரம் குளம்
திண்டுக்கல்லில் தற்போது நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும், மழை நீர் சேகரிப்பு மையமாகவும் இருப்பது கோபால சமுத்திரக்கரை. இந்த இடத்திலும் பல வரலாற்று சிறப்புகள் புதைந்து கிடக்கிறது.
திண்டுக்கல்லில் வேலுநாச்சியார்
ஆங்கிலேயேரை எதிர்த்து போருக்கு கிளம்பிய முதல் இந்திய பெண்ணரசி சிவகங்கை அரசி வேலுநாச்சியார். இவருக்கு ஏழு மொழிகள் தெரியும். போர்கலைகள் பலவும் கற்று தேர்ந்தவர்.
கடந்த 1746ல் தனது 16 வயதில் அப்போதைய சிவகங்கை மன்னராயிருந்த முத்து வடுகநாத துரையை மணந்தார். முத்துவடுகநாதரின் படைதளபதிகள் பெரியமருது, சின்னமருது.
18ம் நுாற்றாண்டில் தமிழகம் பல்வேறு ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கித் தவித்தது.
சிவகங்கையில் தமது வியாபார உரிமையை நிலை நாட்டுவதில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. ஆங்கிலேயரின் எதேச்சதிகாரம் பிடிக்காத சிவகங்கை மன்னரோ பிரெஞ்சுகாரர்களை தேர்வு செய்து விட, ஆங்கிலேயருக்கு கோபம் உண்டானது. இதனால் சிவகங்கையின் மீது ஆங்கிலேய கர்னல்கள் ஜோசப் ஸ்மித், பான்ஜோர் தலைமையில் போர் தொடுத்தனர். இந்த போரில் மருது சகோதரர்கள் தலைமையில் சிவகங்கை படைகள் வீரத்துடன் ஆங்கிலப்படைகளை எதிர்த்து நின்றன.
இந்த போரில் வேலுநாச்சியார் தாமே போர்க்களத்துக்கு வந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார். ஆனால் முடிவோ துயரமானதானது. அரசர் முத்து வடுகநாதனை, ஆங்கிலேயர்கள் ஏமாற்றி போர்க்களத்தின் முன்னணிக்கு வரவழைத்து வஞ்சமாக கொன்றுவிட்டனர். இதன் பின்பு சிவகங்கை படை அழிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் தஞ்சம்
வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளை நாச்சியாருடன், நம்பிக்கைக்கு தகுந்த அமைச்சர் தாண்டவராயருடன் தப்பிச் சென்று திப்புசுல்தான் எல்லைக்குட்பட்ட திண்டுக்கல்லில் தஞ்சம் அடைந்தார். திப்புசுல்தான் ஆதரவோடு திண்டுக்கல் விருப்பாச்சி கோபால்நாயக்கர் உதவியுடன் அய்யம்பாளையத்தில் மறைந்து வாழ்ந்தார். சிவகங்கை பகுதி, ஆங்கிலேயர்களின் கூட்டாளியான ஆற்காடு நவாப்பின் கைக்கு சென்றது. மக்கள் புரட்சி செய்தனர். ஏழு ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்த வேலுநாச்சியார் இந்த புரட்சிக்கு தலைமை வகித்தார்.
போரில் உதவி
இந்த நேரத்தில் திப்புசுல்தானும், கோபால நாயக்கரும் 5,000 குதிரை வீரர்களையும், 5,000 தரைப்படையினரையும், பீரங்கிப்படையின் ஒரு பிரிவையும் அனுப்பி வைத்தனர்.
படை வென்றது
கடந்த 1780ம் ஆண்டு அக்.,17ம் தேதி வேலுநாச்சியார் தலைமையில் மருதுபாண்டியர் தளபதிகளாக செயல்பட்ட படை, சிவகங்கையை பிடித்தது. இந்த வெற்றிக்கு காரணம் கோபால் நாயக்கரும், திப்பு சுல்தான் படைகளும்தான்.
படைகள் ஓய்வெடுத்த குளம்
வேலு நாச்சியாருக்கு அனுப்பி வைத்த 5 ஆயிரம் படை வீரர்களும், குதிரைகளும் தண்ணீர் குடிப்பதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் தோண்டப்பட்ட குளம்தான் கோபால் நாயக்கர்
சமுத்திரக் குளம். இந்த குளம் வெட்டுவதற்கு கோபால்நாயக்கர்தான் தலைமை வகித்தார். இந்த குளத்திற்கு நடுவில் 2 கிணறுகளும் வெட்டப்பட்டது.
- -எஸ்.அரியநாயகம்- - படம்: ஏ.ரவிச்சந்திரன்
அபிராமியம்மன் கோயில்
விஜயநகர ஆட்சியில் அபிராமியம்மன் கோயில் கட்டப்பட்டது. செதுக்கப்பட்ட துாண்கள், அழகாகவும், விஜயநகர பேரசின் கட்டட கலையை விளக்கும் சிற்பங்களும் உள்ளன. பறவைகள், விலங்குகள், தாவரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோபுரம், சுற்று பிரகாரம், அர்த்த மண்டபத்தில் பல சிற்பங்கள் பொதிந்து கிடக்கின்றன. பல கலை சிற்பங்களும் உருவாக்கப்பட்டது. இந்த கோயிலுக்கு வருவது போல எதிரிகள் மலைக்கோட்டை வரக்கூடும் என்பதால், அபிராமியம்மன் கோயில் அடிவாரத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் அடிவாரத்தில் திப்புசுல்தான் ஒரு பள்ளிவாசலையும் ஏற்படுத்தினார்.
பாறை மீது சிறைக்கூடம்
இங்கு பாறைகள் நடுவே சிறைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரும்பு கதவுகள், மேற்பரப்பில் புகை போக்கி, பாதாள சிறையில் 20 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் சூரிய வெளிச்சம் இருக்காது. புகை போக்கி வழியாக காற்று உள்ளே புகும். மேற்பரப்பில் செங்கல், சுண்ணாம்பு, கடுக்காய் கொண்டு பூசப்பட்டு இருக்கும்.
கோபால் நாயக்கருக்கு துாக்கு
சிவகங்கை வேலுநாச்சியாருக்கு உதவியது, ஆங்கிலேயரை தீரமுடன் எதிர்த்து போரிட்டது ஆகிய காரணங்களுக்காக கோபால நாயக்கருடன் ஆங்கில அரசு போர் தொடுத்தது. இதில் முதலில் வெற்றி பெற்றாலும், வஞ்சக வலை விரித்து கோபால நாயக்கரை ஆங்கில அரசு கடந்த 5.9.1801ல் கைது செய்தது. மறுநாள் கோபாலசமுத்திரக்கரையில் உள்ள புளியமரத்தில் துாக்கிலிட்டனர். அதன்பின் இந்த குளம் கோபாலசமுத்திரக்குளம் என பெயர் பெற்றது.
குடிநீர் ஆதாரமானது
இந்த குளம் நாளடைவில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமானது. பின்பு ஆடு, மாடுகள் குளிக்கும் இடமாக மாறியது. நாளடைவில் கழிவு நீர் கலந்து குளம் மாசுபட்டது.
சீரமைப்பு
திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் ரூ.1.50 கோடி செலவில் குளத்தை மழைநீரை சேகரிக்கும் மையமாக மாற்றியுள்ளது. இந்த குளத்தை சுற்றி நடைப்பயிற்சி செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிவு நீர் கலப்பது சுத்தமாக தடுக்கப்பட்டுள்ளது. மேலும் 108 நன்மை தரும் விநாயகர் கோயில் மற்றும் 'திண்டிமா வனம்' அமைப்பினர் மூலம் குளத்தை சுற்றி நிழல் மற்றும் பலன் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல்கள் பெற 98421 -31524ல் தொடர்பு கொள்ளலாம்.
எத்திசை வந்தாலும் கண்காணிப்பு
திண்டுக்கல் மலைக்கோட்டை மீது மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டையில் தங்கும் சிப்பாய்கள், கோட்டையை சுற்றி வட்ட வடிவில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து எதிரிகள் எத்திசையில் வந்தாலும் பார்க்க முடியும். மேலும் அவர்களை நோக்கி பீரங்கிகளும் வைக்கப்பட்டுள்ளன. தற்போதும் பிரிட்டிஷாரின் பீரங்கியுள்ளது.
வீரர்கள் கண்காணிப்பு கோபுரம்
எதிரி படைகள் வருவதையும், உள்ளே வீரர்கள், கைதிகள் செயல்பாட்டையும் கண்காணிக்க ஆளுயரத்தில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நின்று கொண்டே கண்காணிக்கலாம். கூண்டுக்குள் ஆள் நிற்பது வெளியே தெரியாது. வீரனின் கண்கள் வெளியே பார்க்க ஓட்டைகள் உள்ளன. வெளியில் இருந்து பார்த்தால் படைகலன் இருப்பது தெரியும். இதில் ஆயுத சேமிப்பு கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் வசிப்பதற்கும் தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உமாராணி சுற்றுலாத்துறை அதிகாரி.